கோலாலம்பூர், மே 9 - கெத்தும் இலைகள் மற்றும் பானத்தை சட்டவிரோதமாக உற்பத்தி செய்து விநியோகிக்கும் கும்பலை இலக்காகக் கொண்டு சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் காவல்துறையினர் 14 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த ஓப் தாரிங் மித்ரா நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொது நடவடிக்கை படையின (ஜி.எஃப்.ஓ.) மத்திய படைப் பிரிவு கடந்த ஏப்ரல் 24 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் நடத்திய இரண்டு சோதனைகளில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் கெத்தும் இலைகள், பதப்படுத்தப்பட்ட கெத்தும் பானம், பதப்படுத்தும் உபகரணங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய படைப்பிரிவின் கட்டளை அதிகாரி எஸ்.ஏ.சி. ஹக்கேமல் ஹவாரி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
பினாங்கு, பத்து மாவுங்கில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 23 வயதுடைய இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 9,300 வெள்ளி மதிப்புள்ள 85 கிலோ கெத்தும் இலைகள் மற்றும் 1,500 கெத்தும் பான பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
சந்தேக நபர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த ஆறு மாதங்களாகக்
கெத்தும் பானத்தை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
ஒரு பாக்கெட் கெத்தும் பானத்தை இக்கும்பல் 5.00 வெள்ளிக்கு விற்பனை செய்து வந்ததாக பாராட் டாயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சசாலி ஆடாம் தெரிவித்தார்.


