கோலாலம்பூர், மே 9- மேம்படுத்தப்பட்ட ஆயர் சிலாங்கூர் 2.0 செயலி
வாயிலாக சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவைச் சேர்ந்த 96.2
லட்சம் வாடிக்கையாளர்கள் குழாய் உடைப்பு தொடர்பான தங்களின்
புகார்களை இன்று முதல் அதிகாரிகளிடம் அளிக்கலாம்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசுப் தலைமையில் ‘பீஜாக் ஆயர்
மடாணி‘ இயக்கம் தொடங்கப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த முயற்சி
முன்னெடுக்கப்பட்டது என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை
செயல்முறை அதிகாரி ஆடாம் சஃபியான் கசாலி கூறினார்.
குழாய் உடைப்பு தொடர்பான அறிக்கை உள்ளிட்ட அம்சங்களை இந்த
மேம்படுத்தப்பட்ட செயலி கெண்டுள்ளது. இதன் வழி பொது மக்கள் நீர்க்
கசிவு, குழாய் உடைப்பு, மீட்டர் பழுது மற்றும் சட்டவிரோதக் குழாய்
இணைப்பு தொடர்பான புகார்களை நிகழ் நேரத்தில் தெரிவிக்க முடியும்
என்று அவர் சொன்னார்.
பயனற்றுப் போகும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் (என்.ஆர்.டபள்யு.) அளவைக்
குறைப்பது மற்றும் நீர் மேலாண்மையை மேலும் திறனுடன் மேற்கொள்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் எல்.சி.டி. எனப்படும் தினசரி சராசரி லிட்டர் நீர் அளவுகோல்
வசதியையும் இந்த செயலி கொண்டுள்ளது. இதன் மூலம் தினசரி நீர்
பயன்பாட்டின் அளவை பயனீட்டாளர்கள் அறிந்து நீர் மேலாண்மையை
மேலும் ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும்
என அவர் சொன்னார்.
பயனீட்டாளர்கள் தங்களின் நீர் பயன்பாட்டையும் தேசிய நீர் சேவை
அணையம் (ஸ்பான்) நிர்ணயித்துள்ள தினசரி 160 லிட்டர் என்ற தனிநபர்
பயன்பாட்டு அளவையும் ஒப்பிடவும் இயலும் என அவர் அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டார்.
நீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை மக்கள்
மத்தியில் ஏற்படுத்தும் கடப்பாட்டின் ஒரு பகுதியாக ஆயர் சிலாங்கூர்
நிறுவனம் பல்வேறு இலக்கவியல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது
என்றும் அவர் கூறினார்.


