ஆயர் குரோ, மே 9 - இவ்வாண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மத்திய மலாக்காவை சுற்றி நான்கு பெண்களிடம் கொள்ளையடித்ததாக, தம்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றஞ்சாட்டுகளைப் பொருள் அனுப்பும் பணியாளர் ஒருவர், ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
முதல் குற்றச்சாட்டாக அஹ்மாட் ரீஸ்கான், வெளிநாட்டு பெண்ணான ஐலிலூடின் நிலா அஃப்ரிலாவிடம் சொத்து தொடர்பான விவகாரத்தில் கொள்ளையடித்ததாக வழக்கு பதிவாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி, இரவு மணி 9.15-க்கு மத்திய மலாக்கா பச்சாங் பெர்மாய் குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் சாலை வழியில் அவர் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
பின்னர், ஏப்ரல் 22-ஆம் தேதி, கிப்மால் பேரங்காடியில் நோர் ஹயாதி ஹுசேன் என்பவரிடம் கொள்ளையடித்ததைத் தொடர்ந்து, மறுநாள் மதியம் 12.30 மற்றும் மாலை 4.17 மணிக்கு, லோடேஸ் பேரங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில் தியோ போ மீ மற்றும் மௌரீன் சான் சோ நியோ ஆகிய இருவரிடம் கொள்ளையடித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 392-இன் கீழ் இவ்விழக்கு விசாரிக்கப்படுகின்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் உட்பட அதே சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படலாம்.
ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 8,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் இரண்டு நபர் உத்தரவாத்தின் பேரில் விடுவிக்க, நீதிபதி ஹடேரியா சிரி அனுமதியளித்தார்.
பெர்னாமா


