வத்திகன் சிட்டி, மே 9 - போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து,
அமெரிக்காவைச் சேர்ந்த 69 வயது ரோபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதியப் போப்பாண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இனி லியோ XIV என அழைக்கப்படுவார்
கத்தோலிக்கத் திருச்சபையின் 2,000 ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் போப்பாண்டவராகியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
புதியப் போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வத்திகன் சிட்டியில் சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கடந்த 2 நாட்களாக இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதற்காக உலகம் முழுவதிலிருந்து சுமார் 250 கார்டினல்கள் வத்திகன் நகருக்கு வந்தனர். இருப்பினும் 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே போப் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர்.
முன்மொழியப்படும் ஒருவர் குறைந்தது 89 வாக்குகள் அதாவது மூன்றில் இரு பங்கு ஆதரவைப் பெற்றால் மட்டுமே போப்பாண்டவராக தேர்வு செய்யப்படுவார்.
இந்நிலையில் புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தேவாலய புகைபோக்கியில் இருந்து வெண்புகை வெளியேற்றப்பட்டது. வெண்புகையை வெளியேறியதும் தேவலாயத்தை சூழ்ந்து இருந்த மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


