கோலாலம்பூர், மே 9 - விசாக தினத்தை முன்னிட்டு தலைநகரில் நடைபெறவிருக்கும் அலங்கார வாகன ஊர்வலத்தில் பௌத்த சமயத்தைச் சேர்ந்த சுமார் 25,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊர்வலம் எதிர்வரும் திங்கள் கிழமை பிரிக்பீல்ட்ஸ், புத்த மஹா விஹாரா ஆலயத்தில் தொடங்கும்.
மாலை 6.00 மணிக்குத் தொடங்கும் இந்த ஊர்வலத்தில் சுமார் 30 அலங்கார வாகனங்கள் இடம் பெறும் என்று விசாக தின கொண்டாட்டக் குழுவின் இணைத் தலைவர் இங் யோங் பாவ் கூறினார்.
இந்த ஊர்வலம் ஜாலான் பெர்ஹாலாவில் தொடங்கி ஜாலான் சுல்தான்
அப்துல் சமாட், ஜாலான் துன் சம்பந்தன், ஜாலான் பெட்டாலிங், ஜாலான்
யாப் ஆ லோய், ஜாலான் ஹாங் லிக்கு, ஜாலான் கெரேஜா, ஜாலான்
ராஜா சூலான் ஆகிய சாலைகள் வழியாக செல்லும்.
பின்னர், ஜாலான் பி.ரம்லி, ஜாலான் ராஜா சூலான், ஜாலான் துன் டான்
செங் லோக், ஜாலான் துன் சம்பந்தன் மற்றும் ஜாலான் சுல்தான் அப்துல்
சமாட் வழியாக ஆலயம் வந்தடையும். சுமார் 12 கிலோ மீட்டர்
தொலைவிலான இந்த ஊர்வலம் முற்றுப் பெறுவதற்கு நான்கு மணி
நேரம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இங் தெரிவித்தார்.
இந்த அலங்கார வாகன ஊர்வலத்தில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்வர்
என எதிர்பார்க்கபடுகிறது. இது தவிர இந்த அலங்கார ஊர்வலத்தைக் காண
சாலையோரம் ஏராளமான பொது மக்கள் காத்திருப்பர் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது என அவர் சொன்னார்.
‘கருணையும் விவேகமும் நல்லிணக்கத்திற்கு அடித்தளம்‘ எனும்
கருப்பொருளில் இவ்வாண்டிற்கான விசாக தினம் கொண்டாடப்படுகிறது
என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இந்த விசாக தின விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை மாலையில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஆலயத்திற்கு வருகை புரிந்து இந்த வாகன ஊர்வல நிகழ்வைத் தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கபடுவதாக அவர் குறிப்பிட்டார்.


