கோலாலம்பூர், மே 8 - நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிறுவனம் ஒன்றின் இயக்குநருக்கு இன்று இங்குள்ள உயர் நீதிமன்றம் இரு நபர்கள் உத்தரவாதத்துடன் 50,000 வெள்ளி ஜாமீனில் விடுவித்தது.
ஜாமீன் மறுப்பு தொடர்பான செஷன்ஸ் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை எதிர்த்து இந்திய பிஜையான ராஜிந்தர் சிங் (வயது 57) சார்பாக ஆஜரான வழக்கறிஞர் டேனியல் அண்ணாமலை சமர்ப்பித்த ஜாமீன் சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி கே. முனியாண்டி இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு ஜாமீன் வழங்கினார்.
விண்ணப்பதாரரை இரண்டு மலேசியர்களின் உத்தரவாதத்துடன் 50,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதிக்கிறது. மேலும் அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையும் விதிக்கிறது என்று அவர் தீர்ப்பில் கூறினார்.
முன்னதாக, செஷன்ஸ் நீதிமன்றத்தில் 70,000 ஜாமீன் வழங்க அரசு தரப்பு முன்மொழிந்ததாக துணை அரசு வழக்கறிஞர் இசலினா அப்துல்லா
நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், அது வழக்கை நடத்தும் நீதிபதியின் விவேகத்திற்கு உட்பட்டது என் கூறினார்.
இந்த நீதிமன்றம் விண்ணப்பதாரரை ஜாமீனில் விடுவிக்க அனுமதித்தால் அதே ஜாமீன் தொகையான 70,000 வெள்ளி, இரண்டு மலேசிய பிஜைகளின் உத்தரவாதம் மற்றும் மனுதாரர் தனது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையை நாங்கள் முன்மொழிகிறோம் என்று அவர் தெனிவித்தார்.
இதற்கிடையில், தனது கட்சிக்காரர் ஒரு வெளிநாட்டவர் என்பதால் செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததாக டேனியல் வாதிட்டார். இருப்பினும், ராஜிந்தர் வேலை நிமித்தம் சுமார் எட்டு ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருவதோடு செல்லுபடியாகும் பயண ஆவணங்களை வைத்திருப்பதாக அவர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனது கட்சிக்காரருக்கு முன்மொழியப்பட்ட 70,000 வெள்ளி ஜாமீன் தொகை மிகையானது. இந்த கௌரமிக்க நீதிமன்றம் ஜாமீன் வழங்க முன்வந்தால் ஜாமீன் தொகை 40,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தனது வாதத்தில் கூறினார்.


