ஈப்போ, மே 8 - மஞ்சோங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட நான்கு சோதனைகளில் இளம் ஜோடி உட்பட நால்வரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 44 கிலோகிராம் எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் சித்தியவான், சிம்பாங் தீகாவில் உள்ள ஒரு வீட்டில் 28 வயது இளைஞரையும் அவரது 24 வயது காதலியையும் போலீசார் கைது செய்ததாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
சோதனையின் போது வீட்டில் மெத்திலீன் டையாக்ஸிமெத்தாம்பேட்டமைன் (எம்.டி.எம்.ஏ.) வகைப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு நடத்தப்பட்டச் சோதனையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் 15.6 கிலோ அதே வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் இன்று பேராக் காவல் துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
அதே நாள் இரவு 8.55 மணியளவில் சித்தியவான், தாமான் செஜாத்தியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 50 வயதுடைய ஆடவர் ஒருவரை கைது செய்தத போலீஸ் குழு,
மொத்தம் 127 கிராம் (கிராம்) எடையுள்ள கெத்தமைன் மற்றும் எராமின் 5 போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததாக நூர் ஹிசாம் கூறினார்.
கைதான மூன்று சந்தேக நபர்கள் அளித்த தகவலின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.19 மணியளவில் போதைப்பொருள் சேமிப்பு மையமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வீட்டை முற்றுகையிட்ட போலீசார், 11.4 கிலோ எம்.டி.எம்.ஏ மற்றும் 299 கிராம் கெத்தமைன் ஆகியவற்றை கண்டுபிடித்ததனர். மேலும் 970 வெள்ளி ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர் என அவர் சொன்னார்.
சிறுநீர் பரிசோதனையில் மூன்று சந்தேக நபர்களும் எரிமின் 5 என்ற போதைப்பொருளுக்கு அடிமையாயிருந்தது சோதனையில் செய்ததாகவும் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான முந்தைய பதிவுகள் அவர்களுக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கும்பல் கடந்த மார்ச் மாதத்திலிருந்து செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.
1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39பி இன் கீழ் விசாரணக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மே 12 வரை ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.


