ஆராவ், மே 8 - பெர்லிஸ் மாநிலத்தில் பாலியல் குற்றங்கள் 31 விழுக்காடு அதிகரித்துள்ளன.
2023-ல் 39 சம்பவங்கள் பதிவான நிலையில் கடந்தாண்டு 12 சம்பவங்கள் அதிகரித்ததாக மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ முஹமட் அப்துல் ஹலிம் கூறினார்.
இதில் 12 முதல் 16 வயது பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களில் சிலர் கருவுற்று குழந்தை பிரசவித்த சம்பவங்களும் உண்டு என அப்துல் ஹலிம் சொன்னார்.
முகநூல், டிக் டோக், வாட்ஸ்ஆப், தெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் காதலர்களைத் தேட முற்பட்டு, பலர் இதில் சிக்கிக் கொள்கின்றனர்.
அதாவது அந்த ஊடகங்கள் மூலம் சாதாரணமாக அறிமுகமாகி நெருக்கம் ஏற்பட்டு கடைசியில் அவர்கள் பாலியல் உறவு வரை போய் விடுவதாக அப்துல் ஹலிம் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இது போன்ற குற்றச் செயல்களைத் தடுக்க, பள்ளி அளவில் விழிப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.


