ஷா ஆலம், மே 8 - வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளூர் வளர்ச்சிக்கான உந்து சக்தியாக விளங்கும் பல ஆண்டுகால வெற்றிகரமான முதலீடு மற்றும் பங்காளித்துவத்தின் அடிப்படையில் உயர் மதிப்புள்ள தொழில் துறைகளில் வலுவான ஒத்துழைப்புடன் தங்கள் பொருளாதார உறவுகளை அதிகரிக்க சிலாங்கூரும் ஜப்பானும் தயாராக உள்ளன.
மலேசியாவின் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமான சிலாங்கூர், கடந்த 2017 மற்றும் 2024 க்கும் இடையே ஜப்பானிலிருந்து 115 முதலீட்டுத் திட்டங்களை ஈர்த்துள்ளது.
இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு கிட்டத்தட்ட 4,800 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் குறிப்பிட்டார்.
தற்போது சிலாங்கூரில் செயல்பட்டு வரும் ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளூர் வேலை வாய்ப்பில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. மேலும், எஸ்.எம்.இ. எனப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு வலுவான ஆதரவை வழங்கியுள்ளதோடு வட்டார சமூகங்களுக்கு நேர்மறையான பங்களிப்பையும் வழங்கியுள்ளன என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரும் ஜப்பானும் செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுடுத்தவும் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தையும் விநியோகச் சங்கிலியை உருவாக்கவும் உள்ளன என்று இங் குறிப்பிட்டார்.
இங்கு நேற்று நடைபெற்ற நேற்று 2025 ஒசாகா அனைத்துலக கண்காட்சியையொட்டி மலேசிய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர்-ஜப்பான் முதலீட்டாளர்கள் பாராட்டு விருந்து மற்றும் ஒருங்கமைப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் இங் இவ்வாறு கூறியதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களித்த ஜப்பானிய நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா, மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநிலச் செயலாளர் டத்தோ அகமது பாட்ஸ்லி அகமது தாஜூடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளாக ஜப்பான் சிலாங்கூரின் மிகவும் மதிப்புமிக்க பங்காளிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு வளர்ச்சியை அதிகரிக்க இரு தரப்பினரின் பலங்களையும் விவேக பங்காளித்துவ ரீதியாகப் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஒத்துழைக்க ஜப்பான் தயாராக உள்ளது என்றும் இங் கூறினார்.


