கோலாலம்பூர், மே 8 - கடந்த 2022-ஆம் ஆண்டில், தமது 63-ஆவது வயதில் எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனைப் படைத்தார் இளங்கோவன் நாச்சிமுத்து. இவ்வாண்டு தமது 66ஆவது வயதில் லுக்லாவிற்கு அருகிலிருக்கும் சுமார் 6,476 மீட்டர் உயரமுடைய MERA PEAK மலையேறி மற்றொரு சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இந்த மலையேறும் நடவடிக்கையில் தம்முடன் இணைந்து கொண்ட எழுவரில் மூவர் வெற்றிகரமாக சிகரத்தை அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இளங்கோவன் உட்பட ஆறு மலேசியர்களும் அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த மலையேறும் பயணத்தை காத்மாண்டுவிலிருந்து தொடங்கி ஏப்ரல் 17-ஆம் தேதி நிறைவு செய்ததாக இளங்கோவன் கூறினார்.
"நடு காட்டிற்குள் பயணிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அங்குள்ள தட்பவெப்பத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது தொடர்பிலான தொழில்நுட்பவியல் பயிற்சியை அங்கிருக்கும் நிபுணர்கள் வழங்கினர் என்றார்.
மேலும், மலையை நெருங்கும் போது மழைப் பெய்வது போல பனி வேகமாக கொட்டுவதால், விறைக்க வைக்கும் அளவிற்கு குளிர் ஏற்படும். அதற்குள் HIGH CAMP எனப்படும் 5,900 மீட்டர் உயரத்தில் உள்ள மலையின் கடைசி முகாமை அடைய வேண்டும்.
ஆனால், தம்முடன் வந்தவர்களுள் 66 வயதான சரோஜினி, 62 வயதான செல்வநாதன் இருவரால் மட்டுமே அந்த நிலையைக் கடந்து, MERA PEAK சிகிரத்தை தொட முடிந்ததாக இளங்கோவன் தெரிவித்தார்.
--பெர்னாமா


