பிரசெல்ஸ்/வாஷிங்டன், மே 8 - உலக அரங்கில் மிகவும் மோசமடைந்து
வரும் தனது நாட்டு ஹாலிவூட் திரைப்படத் துறைக்கு மறுபடியும்
ஆதிக்கத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டேனால்ட் டிரம்ப்
முனைப்பு காட்டி வருகிறார்.
அமெரிக்க திரைப்படத் துறை அதி வேகத்தில் மரணத்தை நோக்கிச்
சென்று கொண்டிருக்கிறது என்று டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது
ட்ரூட் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருந்தார்.
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்துத்
திரைப்படங்களுக்கும் 100 விழுக்காடு வரி விதிக்கும்படி அமெரிக்க
வர்த்தகத் துறை மற்றும் வர்த்தகப் பேராளர்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டார்.
அதிபர் டிரம்பின் இந்த உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க வர்த்தக
அமைச்சர் ஹாவர்ட் லுட்டினிக், தற்போது அதனை நடைமுறைப்படுத்தும்
பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
கடந்த திங்கள்கிழமை வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில்
‘ஹாலிவூட் அழிக்கப்பட்டு வருகிறது‘ எனக் கூறிய டிரம்ப், அத்துறைக்கு
உதவுவதற்காக அதன் பிரதிநிதிகளை தாம் சந்திக்கவுள்ளதாகத்
தெரிவித்தார்.
இத்தகைய தவறுகள் நிகழ்வதற்கு காரணமாக இருந்ததாக கலிபோர்னியா
கவர்னர் கேவின் நியுசனை டிரம்ப் குறை கூறினார். அதே சமயம்
அமெரிக்க திரைப்படத் துறையை திருடுவதாக மற்ற நாடுகளை அவர்
குற்றஞ்சாட்டினார்.
எனினும், 100 விழுக்காடு வரி விதிக்கும் முடிவுக்கு எதிர்மறையான
கருத்துகள் வெளியானதைத் தொடர்ந்து சற்று மென்மையான தொனியில்
இந்த அறிக்கையை வெளியிட்ட அவர், வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை
அளிக்க வேண்டும் என்பதால் அவர்களின் மனநிறைவைக் கருத்தில் கொண்டு திரைப்படத் தொழில்துறையினருடன் தாம் சந்திப்பு நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.


