ஷா ஆலம், மே 8 - பிராந்திய விவகாரங்களை நன்கு அறிந்த எதிர்காலத் தலைவர்கள் உருவாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உயர்கல்வி அமைச்சு அதன் அனைத்து கல்விக் கூடங்களிலும் மாணவர்களிடையே ஆசியான் விழிப்புணர்வை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உலகளாவிய மேம்பாடுகளுக்கு மத்தியில் வலுவான, நிலையான பிராந்திய பங்காளித்துவத்தால் பகிரப்பட்ட சுபிட்சம் இன்றியமையாததாக இருக்கும் நிலையில், இந்த முன்னெடுப்பு முக்கியமானது என்று மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் வலியுறுத்தினார்.
ஆசியான், பரஸ்பர புரிதலுடன் கூடிய ஒரு ஐக்கிய கூட்டமைப்பாக செயல்பட வேண்டும். இங்கு நாம் மகத்தான ஆற்றலைக் காண்கிறோம். நமது பிராந்தியத்தில் சுமார் 70 கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் 40 விழுக்காட்டினர். இளைஞர்களாவர். நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம். இல்லையெனில் ஆசியான் உணர்வை இழக்கும் அபாயம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுல்லாமல் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா அல்லது இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் போன்ற விரும்பத்தகாத மோதல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆசியான் நாடுகளிடையே சகோதரத்துவ உறவுகளைப் பேணுவதற்கு நமது கிட்டத்தட்ட 60 ஆண்டுகால அமைதி, சுதந்திரம் மற்றும் நடுநிலைமை ஆகியவற்றின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
நேற்றிரவு ஆசியான்-நாடாளுமன்றங்களுக்கு இடையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் 2வது ஆலோசனைக் கூட்ட இரவு விருந்து நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இந்த நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ, ஆசியான் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான சபையின் பொதுச்செயலாளர் சித்தி ரோசைமெரியாந்தி அப்துல் ரஹ்மான், சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் மற்றும் ஒய்.பி.ஏ. தலைவர் டத்தோ முகமது சஹார் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மூன்று நாள் நிகழ்வின் போது எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களில் ஆசியான் உறுப்பினர்களிடையே, குறிப்பாக இளைஞர் நாடாளுமன்ற ஒருங்கமைப்புகள் மூலம் உறவுகளை மேம்படுத்துவதும் அடங்கும் என்று ஜோஹாரி கூறினார்.
வருடாந்திர கூட்டங்களுக்கு அப்பால் இளம் தலைவர்களிடையே நீடித்த ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக டத்தோ சஹார் ஆசியான் அளவிலான பயணத்தை மேற்கொள்வார் என்று அவர் மேலும் கூறினார்.


