காஸா நகர்/இஸ்தான்புல், மே 8- இஸ்ரேலிய இராணுவம் காஸா தீபகற்பம் முழுவதும் நேற்று நடத்திய வான் தாக்குதலில் குறைந்த து 54 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
காஸா நகரில் புகலிட மையமாகப் பயன்படுத்தப்பட்ட பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய எறிபடைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறின.
கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய காஸாவில் உள்ள புரேஜி அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டு 73 பேர் காயமடைந்த நிலையில் அதற்கு மறுநாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் போரைத் தொடங்கியது முதல் 234 அகதிகள் புகலிட மற்றும் மறுகுடியேற்ற மையங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகக் காஸா அரசின் ஊடக அலுவலகம் கூறியது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளாக காஸவில் நீடித்து வரும் இந்த போரில் இதுவரை 52,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர்.


