கோலாலம்பூர், மே 8- கத்ரி நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறி புக்கிட் சுபாங் சாலை சமிக்ஞை விளக்கு நோக்கிச் செல்லும் சாலையில் நேற்று ஆறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். அதன் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக லோரி ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் 31 வயது நபர் ஓட்டிச் சென்ற லோரி பத்து ஆராங்கிலிருந்து சைபர்ஜெயா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது என்று சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ஹபீஸ் முஹமது நோர் கூறினார்.
முதலில் ஒரு புரோட்டான் சாகா காரை மோதிய அந்த லோரி பின்னர் அதே திசையில் பக்கத்து தடத்தில் இருந்த மேலும் நான்கு வாகனங்களை மோதியது வாகன டேஷ்போர்டு வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டது. மேலும் புரோட்டான் சாகா காரின் ஓட்டுநர், 29 வயது பெண் மற்றும் காரின் பின் இருக்கையில் குழந்தை இருக்கையில் அமர்ந்திருந்த அவரது நான்கு வயது மகள் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டியதற்காக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42 (1)வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது அது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், இன்ஸ்பெக்டர் அஸி அசியான்டி முகமது ரஃபேயை 013-6756317 என்ற எண்ணில் அல்லது சுங்கை பூலோ மாவட்ட காவல் தலைமையக செயல்பாட்டு அறையை 03-61561222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


