ஷா ஆலம், மே 8 - கிள்ளான் வட்டாரத்தில் வெள்ளப் பிரச்சனை
தொடராமலிருப்பதை உறுதி செய்ய வெள்ளத் தடுப்புத் திட்டங்களை
(ஆர்.டி.பி.) விரைவுபடுத்த கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.)
வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இப்பகுதியில் 11 வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் கொள்முதல்
நடவடிக்கைகளுக்காக காத்திருப்பதாக பண்டமாரான் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் டோனி லியோங் தக் சீ கூறினார்.
இந்த திட்டங்களை விரைவுபடுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு
ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் என்று அவர்
வலியுறுத்தினார்.
தற்போது கொள்முதல் நடவடிக்கைக்காக 11 திட்டங்கள் காத்திருக்கின்றன.
இந்த திட்டங்கள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஆகவே,
பொருள் அளவையாளர்கள் பற்றாக்குறை நிலவினால் பணியளர்கள்
எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என அவர் சொன்னார்.
உரிமையாளர்கள் இல்லாத கால்வாய் பிரச்சனை மாநில அரசின்
அதிகாரத்திற்கு உட்பட்டதாக உள்ளது. இதுவொரு சிக்கலான
பிரச்சனையாக விளங்குகிறது. இதில் நாம் விருப்பம் போல் தலையிட
முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள
நேரிடும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இதனிடையே, கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளத் தடுப்புத்
திட்டங்களை கண்காணிக்க தமது தரப்பு சிறப்புக் குழுவை
உருவாக்கியுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ்
கூறினார்.
இந்த சிறப்புக் குழுவில் ருக்குன் தெத்தாங்கா, மாநகர் மன்ற
உறுப்பினர்கள், வடிகால், நீர்பாசனத் துறை மற்றும் ஊராட்சி மன்றப்
பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பர் என அவர் சொன்னார்.
நாங்கள் வெள்ளத் தடுப்புத் திட்டங்களோடு உரிமையாளர்கள் இல்லாத
வடிகால்களையும் கண்காணித்து அதன் தொடர்பான முன்னேற்றங்களை
பொது மக்களுக்கு அறிவிப்போம் என்றார் அவர்.
பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் விதமாக ஷா ஆலம் மாநகர்
மன்றம் ஸ்ரீ மூடாவில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை விரிவுபடுத்தி
வருகிறது என்றும் அவர் சொன்னார்.


