புத்ராஜெயா, மே 8 - PdPR எனப்படும் இல்லிருப்பு கற்றல் கற்பித்தலை 2025 ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது அமல்படுத்தும் பள்ளிகளின் பட்டியலை கல்வி அமைச்சு விரைவில் அறிவிக்கும்.
மாநாட்டின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பயணத்திற்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையில் இடம்பெறும் பள்ளிகளின் முழுப் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு, புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
உச்சநிலை மாநாட்டிற்கான முக்கிய பாதைகளில் உள்ள பள்ளிகளை கல்வி அமைச்சு அடையாளம் காணும். பின்னர், அந்த பள்ளிகளின் பட்டியல் அறிவிக்கப்படும். மாணவர்கள் இல்லிருப்பு கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இதைத் தவிர்த்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் கே.எல் ஆய்.ஏவின் சுற்று வட்டார பாதைகளுடன் மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பயன்படுத்தும் முக்கிய பாதைகளின் பட்டியலையும் அரச மலேசிய காவல்துறை விரைவில் வெளியிடும் என்று ஃபஹ்மி கூறினார்.
பெர்னாமா


