ஜோர்ஜ் டவுன், மே 8 - குத்தகையாளர் ஒருவரிடமிருந்து 54,000 வெள்ளியை
லஞ்சமாக பெற்ற சந்தேகத்தின் பேரில் பினாங்கிலுள்ள ஊராட்சி மன்றம்
ஒன்றின் இரு மருத்துவப் பணியாளர்கள் நேற்று தொடங்கி மூன்று
நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பினாங்கு மாநில ஊழல் தடுப்பு ஆணையம் செய்து கொண்ட மனுவை
ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜூரைடா அப்பாஸ் முப்பது மற்றும் 60 வயது
மதிக்கத்தக்க அவ்விருவருக்கும் எதிராக தடுப்புக் காவல் அனுமதியை
வழங்கினார்.
அவ்விருவரும் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று பிற்பகல் 2.30
மணியளவில் பினாங்கு மாநில ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகம் வந்த
போது கைது செய்யப்பட்டனர்.
அவ்விரு நபர்களும் கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
குத்தகையாளர் ஒருவரிடமிருந்து 54,000 வெள்ளியை லஞ்சமாக கேட்டுப்
பெற்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை பெர்னாமாவிடம்
உறுதிப்படுத்திய பினாங்கு மாநில எம்.ஏ.சி.சி. இயக்குநர் டத்தோ முகமது
புவாட் பீ பஸ்ரா, அவர்கள் இருவரும் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி.
சட்டத்தின் 16(ஏ)(பி) பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.


