கோத்த பாரு, மே 8 - விரைவில் நடைபெவிருக்கும் கெஅடிலான் ராக்யாட் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட நூருல் இஸ்ஸா அன்வாருக்கு கிளந்தான் மாநிலத்தின் 14 தொகுதி தலைவர்களில் 13 பேர் தங்கள் ஆதரவை வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
கட்சியை மேலும் வலுப்படுத்தக்கூடிய தலைவராக விளங்குவதில் இஸ்ஸாவுக்கு உள்ள அனுபவம் காரணமாக இந்த ஆதரவை தாங்கள் வழங்கியதாகக் கிளந்தான் மாநில தலைமைத்துவ மன்றத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முகமது சுபராடி முகமட் நூர் கூறினார்.
அரசியலில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மற்றும் எப்போதும் அடிமட்ட மக்களுடன் இருக்கும் ஆளுமை மூலம் அதிகரித்து வரும் சவாலான அரசியல் சூழலை எதிர்கொண்டு கட்சியை மிகவும் பயனுள்ள திசையில் வழிநடத்த நூருள் உதவ முடியும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தானா மேரா, கோத்தா பாரு, குவா மூசாங், பாச்சோக், கெத்தேரே, பாசிர் பூத்தே, மச்சாங், குபாங் கிரியன், ரந்தாவ் பாஞ்சாங், தும்பாட், பாசிர் மாஸ், ஜெலி மற்றும் கோல கிராய் ஆகிய 13 தொகுதிகளின் தலைவர்கள் தங்கள் ஆதரவை புலப்படுத்தினர் என்று சுபாரடி மேலும் கூறினார்.
முன்னதாக, கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆடம் அட்லி அப்துல் ஹலிம், பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின், ஜோகூர் மற்றும் கூட்டரசு பிரதேசம் உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த தொகுதிகள் துணைத் தலைவர் பதவிக்கு இஸ்ஸா போட்டியிட வெளிப்படையாக தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன.
2025 கெடிலான் மத்திய தலைமைத்துவ மன்றம், இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு இணையம் வழி நடைபெறும்.


