ஷா ஆலாம், மே 7- விரைவில் நடைபெறவிருக்கும் கெஅடிலான் ராக்யாட் (கெடிலான்) கட்சித் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் கட்சியை வலுப்படுத்த தாம் தொடர்ந்து பங்களிப்பை வழங்கவுள்ளதாக டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி உறுதியளித்துள்ளார்.
பேராளர்களின் முடிவு எதுவாக இருந்தாலும் 16வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான பங்களிப்புகளை வழங்குவதற்கான வாய்ப்பை அது தமக்கு வழங்கும் என்று கெஅடிலான் துணைத் தலைவருமான அவர் கூறினார்.
நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியின் துணைத் தலைவராகவும் அதன் மூலம் அரசாங்கத்திலும் தொடர்ந்து பங்கு வகிக்க முடியும். அதே சமயம் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் சுறுசுறுப்பான ஒரு அடிமட்டத் தலைவராக திரும்பி களத்தில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட முடியும் என்று அவர் இன்று முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் தனது நடப்புப் பதவியைத் தற்காக்க தயாராக இருப்பதை கோடிட்டுக் காட்டிய பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், கட்சியை வலுப்படுத்த மற்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதையும் வரவேற்றார்.
தேர்தலில் போட்டியிடுவது என்பது ஒவ்வொருவரின் உரிமை. சம்பந்தப்பட்ட கட்சி வலியுறுத்தியுள்ள ஜனநாயக உணர்வில் அந்த உரிமையைப் போற்ற வேண்டும் என்றும் ரபிஸி விளக்கினார்.
ஆகவே, கட்சித் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியை நான் வரவேற்கிறேன். மேலும் கட்சியை வலுப்படுத்த இந்தத் தேர்தல் களத்தில் மற்ற வேட்பாளர்களுடன் நானும் சேருவேன் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், கடந்த வாரங்களில் பல்வேறு கருத்துக்களை வழங்கிய அனைத்து கெஅடிலான் இயக்கவாதிகள் மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்தத் தேர்தலின் விளைவாக எழுந்துள்ள பல சர்ச்சைகள் சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவை யாவும் மக்களால் கவனிக்கப்படுகின்றன. எனவே நாம் அவற்றை விவேகத்துடன் கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கட்சியில் எனக்கு 26 ஆண்டுகால அனுபவம் உள்ளது. பதவி என்பது ஒரு கனமான நம்பிக்கை, ஒரு அமைச்சர் பதவி என்பது அதைவிட கடினமானது. அதை எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார் அவர்.


