ஹெமில்டன், மே 7 - காஸா மீதான இஸ்ரேலிய முற்றுகையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அமல்படுத்துவது மீதான ஐக்கிய நாடுகள் சபையின் குழு நேற்று வலியுறுத்தியது.
பஞ்சமும் நோய் பரவலும் லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையை மோசமாக்குவதாக அக்குழு எச்சரித்ததாக அனடோலு ஏஜான்சி தெரிவித்தது.
கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் இஸ்ரேல் மேற்கொண்டு முற்றுகையை கண்டித்த அந்தக் குழு மார்ச் 18ஆம் தேதி போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது முதல் நடத்தப்படும் இடைவிடாத குண்டுவீச்சுத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன என்று கூறியது.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் இதுவரை 2,308 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போரில் மொத்த மரண எண்ணிக்கை 52,400 க்கும் அதிகமாக உள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 முதல் நடத்தப்பட்டு தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக 118,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அக்குழு கூறியது.
மனிதாபிமான உதவிகளுக்கான அவசரத் தேவையை வலியுறுத்திய அக்குழு, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் கடைசி உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதையும் அது சுட்டிக்காட்டியது.
காஸாவிற்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை முற்றிலும் தடுக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் காஸாவில் துயரத்தை அதிகரிக்கின்றன. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மற்றும் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்த 19 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பட்டினி, நோய் பரவல் மற்றும் அடிப்படைத் தேவைகள் கிடைக்காத நிலையில் உள்ளதை காட்டுகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில் உள்ளன. இத்தகையைச் செயல்கள உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"தன்னார்வ இடம்பெயர்வு" அல்லது "மறு மேம்பாடு" என்ற பெயரில் பாலஸ்தீனர்களை கட்டாயமாக இடமாற்றம் செய்யும் எந்தவொரு செயலையும் அக்குழு நிராகரித்தது. அத்தகைய திட்டங்களை மனிதாபிமானமற்றது மற்றும் சட்டத்திற்கும் விரோதமானது என்று அது தெரிவித்தது.
அனைத்துலக நீதிமன்றத்தின் ஆலோசனை நடவடிக்கைகளை அந்த குழு வரவேற்றதுடன் மனிதாபிமான உதவிகளைத் தடுக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அனைத்துலகச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதா என்பது குறித்து உடனடியாக ஒரு கருத்தை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
காஸா மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்கும் நோக்கில் வரும் ஜூன் மாதம் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து நடத்தவுள்ள உயர்மட்ட அனைத்துலக மாநாட்டிற்கும் இந்தக் குழு தனது ஆதரவைத் தெரிவித்தது.


