கோலாலம்பூர், மே 6 - உலகளவில் புத்திக் கூர்மையில் மலேசியர்கள் முதல் 25 இடங்களில் வந்துள்ளனர். அதாவது International IQ Test வெளியிட்ட அண்மைய பட்டியலில் மலேசியா 22-ஆவது இடத்தைப் பிடித்தது.
19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், மலேசியர்களின் சராசரி IQ குறியீடு 100.48 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
இதன் மூலம் தென் கிழக்காசியாவில் சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்து மலேசியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது.
மேலும், சிங்கப்பூர் உலகளவில் ஐந்தாவது இடத்திலும் தாய்லாந்து 15-ஆவது இடத்திலும் உள்ளன. மற்றோர் அண்டை நாடான இந்தோனேசியா 98-ஆவது இடத்தில் உள்ளது.
தொற்று நோய், உணவுப் பழக்க வழக்கம், அறிவுசார் நடவடிக்கைகள் மற்றும் மரபியல் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் நாட்டின் சராசரி IQ அளவிடப்படுகிறது.
தொற்று நோய் விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் மக்களின் IQ பொதுவில் குறைவாகவே இருக்கும். அதே சமயம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உள்ள மற்றும் பசி பட்டினி இல்லாத நாடுகளில் IQ நல்ல நிலையில் இருக்கும்.


