மலாக்கா, மே 7- சுங்கை பெத்தாய் அலோர் காஜாவில் துன்புறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மாத ஆண் குழந்தையின் தாய் மற்றும் தந்தை விசாரணைக்கு உதவ இன்று முதல் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(a) பிரிவின் கீழ் விசாரணை நடத்த ஏதுவாக 22 வயதுடைய அத்தம்பதியினரை எதிர்வரும் மே 13 ஆம் தேதி வரை காவலில் வைக்க ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹடேரியா சிரி உத்தரவிட்டார்.
வேலையில்லாத அந்த தம்பதியினர் நேற்று மாலை 6.30 மணியளவில் மலாக்கா மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எதிரே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவ நிபுணர் அதன் தலையில் புதிய மற்றும் பழைய காயங்கள் இருப்பதைக் கண்டறிந்து அறிக்கை அளித்ததை தொடர்ந்து அத்தம்பதியர் கைது செய்யப்பட்டதாக மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ துல்கைரி முக்தார் கூறினார்.
மலாக்கா மருத்துவமனையில் அதன் தாயால் கைவிடப்பட்ட குழந்தையை
மருத்துவரின் பரிசோதனை செய்தபோது துன்புறுத்தல் காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படும் காயங்களின் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
தனது குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி அக்குழந்தையை அதன் தாயார் அலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் பின்னர் அக்குழந்தை மலாக்கா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.


