நியூயார்க், மே 7 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், போர் ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த நெருக்கடி இவ்விரு நாடுகளின் மக்களுக்கும் கடுமையான பாதகத்தை ஏற்படுத்தும் என்று ஐ.நா. பொது செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
தெற்காசியாவில் பதட்டங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ மோதலைத் தூண்ட வேண்டாம் என்று அவர் கடந்த திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
"பதற்றத்தைக் குறைத்தல், அரச தந்திரம் மற்றும் அமைதிக்கான புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க ஐ.நா சபை தயாராக உள்ளது', என்றார் அவர்.
பொதுமக்கள் பாதிப்படையாமல், சட்டப்பூர்வமான வழிமுறைகள் மூலம் இதற்கான தீர்வுகளைப் பெற இரு நாடுகளும் முயற்சிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த மூன்று நாள்களில் இரண்டாவது ஏவுகணை சோதனையைப் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.
இந்தியா எந்நேரத்திலும் தாக்குதல் மேற்கொள்ளலாம் என்று உளவுத் துறை தெரிவித்திருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது. அதே வேளையில், இந்தியாவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பெர்னாமா


