மச்சாங், மே 7- கட்டுப்பாட்டை இழந்த கார் லோரி மீது மோதியதில் அக்காரின் ஓட்டுநரான 46 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து கோத்தா பாரு-கோல கிராய் சாலையின் 50.5வது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
நேற்று காலை 11.55 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் புரோட்டான் வீரா கார் மற்றும் ஸ்கேனியா ரக லோரி சம்பந்தப்பட்டிருந்ததாக மச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ஷாபிகி ஹூசேன் தெரிவித்தார்.
கோத்தா பாருவிலிருந்து கோல கிராய் நோக்கிச் சென்ற அந்தக் கார் சம்பவ இடத்தில்
கட்டுப்பாட்டை இழந்து எதிர் தடத்தில் வந்து கொண்டிருந்த லோரி மீது மோதியது என அவர் சொன்னார்.
இந்த விபத்தின் விளைவாக காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மச்சாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இவ்விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் கைருலன்வர் ஆதாமை 011-10085165 என்ற எண்ணில் அல்லது மச்சாங் மாவட்ட காவல் தலைமையக செயல்பாட்டு அறையை 09-9751222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


