ஷா ஆலம், மே 7- கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நுருள் இஸ்ஸா அன்வாரின் முடிவுக்கு சிலாங்கூரிலுள்ள 22 தொகுதிகளில் 19 ஆதரவைப் புலப்படுத்தியுள்ளன.
கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நுருள் இஸ்ஸா முன்மொழியப்பட்டதானது வலுவான அணியை உருவாக்குவதிலும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பதிலும் தொடர்ந்து தொடர்புடைய, முற்போக்கான மற்றும் ஆக்கப்பூர்வமான கட்சியாக விளங்கச்
செய்வதிலும் உரிய பங்கினை ஆற்றும் என நேற்று வெளியிடப்பட்ட கூட்டறிகைகை கூறியது.
ரிபோர்மாஸி வரலாற்றின் அடித்தளத்தை உணர்ந்துள்ள அதே வேளையில்
அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கட்சியை உள்கட்டமைப்பை வலுப்படுத்தக்கூடிய தலைமைத்துவம் சிலாங்கூருக்கு தேவை என அந்த தெரிவித்தது.
நுருள் இஸ்ஸா அரசாங்கத்தில் எந்த பதவியும் வகிக்காத காரணத்தால் கட்சியை வலுப்படுத்துவத்தில் முழு கவனத்தையும் செலுத்த அவர் தயாராக இருக்கிறார்.
அரசு நிர்வாகத்தினால் பிணைக்கப்படாத ஒரு துணைத் தலைவர் கட்சிக்குத் தேவை. அதே சமயம், கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தக்கூடியவராகவும் அவர் இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
ரிபோர்மாஸி இயக்க போராட்டத்தில் தொடக்க காலம் முதல் ஈடுபட்டு வரும் நுருள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் என்ற முறையில் தனது ஆற்றலையும் நிரூபித்துள்ளார்.
முழு பொறுப்புணர்வுடன் நாங்கள் நுருள் இஸ்ஸாவுடன் உறுதியாக ஒன்றுபட்டு நிற்கிறோம். ஒன்றுபட்ட மற்றும் முதிர்ச்சியடைந்த கெஅடிலான் போராட்டத்தின் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இந்த முன்மொழிவு அமையும் என எதிர்பார்க்கிறோம் என சிலாங்கூர் மாநில கெஅடிலான் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
நுருள் இஸ்ஸா கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்மொழிந்த தொகுதிகளில் கோத்தா ராஜா (டாக்டர் ஜி.குணராஜ்), கோல சிலாங்கூர் (எம்.சிவபாலன்), சுங்கை பூலோ (டத்தோ ஆர்.ரமணன்), உலு சிலாங்கூர் ( டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன்), உலு லங்காட் (எம். ராஜேந்திர குமார்), சுபாங் (எம்.பிரவின்) ஆகிய தொகுதிகளும் அடங்கும்.


