ஜெர்த்தே, மே 7- டிக்டாக் செயலி அல்லது டிக்டாக் ஷோப்பில் கடையைத்
திறப்பதற்கான வாய்ப்பினை வழங்கும் பேஸ்புக் விளம்பரத்தால்
கவரப்பட்ட முன்னாள் ஆசிரியர் ஒருவர் 82,600 வெள்ளியை இழந்தார்.
இணையம் வழி வர்த்தகம் புரிவதற்கான வாய்ப்பினை வழங்குவதாகக்
கூறும் இத்திட்டத்தால் 67 வயதான அந்த ஆசிரியர் கவரப்பட்டதாகப் பெசுட்
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது அபு கூறினார்.
இந்த வர்த்தகத்தில் ஈடுபட அந்த முன்னாள் ஆசிரியர் ஆர்வம்
காட்டியதைத் தொடர்ந்து கணக்கை பதிவு செய்வதற்காக
அடையாளக்கார்டு நகல் மற்றும் புகைப்படத்தை அனுப்பும்படி அவர்
கேட்டுக் கொள்ளப்பட்டார்.
பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு சொந்தமான டிக்டாக் கடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த இணைய கடையை நடத்துவதற்கான தொடக்க முதலீடாக பணத்தை செலுத்தும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார் என்று அகமது அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த முன்னாள் ஆசிரியரும் தொடக்க முதலீடாகப் பணத்தைச்
செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு கணிசமான தொகை
வருமானமாக கிடைத்தது.
அந்த திட்டம் மீது நம்பிக்கை கொண்ட அந்த முன்னாள் ஆசிரியர் சந்தேக
நபரின் கோரிக்கையின் பேரில் வழங்கப்பட்ட பல்வேறு வங்கிக்
கணக்குகளுக்கு 13 பரிவர்த்த்தனைகள் மூலம் 82,600 வெள்ளியைச்
செலுத்தினார் என்றார் அவர்.
சந்தேக நபர் முதலீட்டை மேலும் அதிகரிக்கும்படி வலியுறுத்தியதைத்
தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஆடவர் கடந்த
ஞாயிற்றுக்கிழமையுடன் பணப்பரிவர்த்தனையை நிறுத்திக் கொண்டதாக
அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க டாலரைப் பயன்படுத்தும் அந்த டிக்டாக் கடை போலியானது
என நம்பப்படுவதோடு அதிக ஆர்டர்கள் வருவதை காணமுடிந்தாலும்
அதற்கான கட்டணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்ற அவர்
குறிப்பிட்டார்.


