ஈப்போ, மே 7- மோட்டார் சைக்கிளை கார் மோதிய சம்பவத்தில்
கணவரும் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம்
ஈப்போ-தைப்பிங் சாலையின் 64வது கிலோ மீட்டரில் கோல கங்சார்
அருகே நேற்று நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் காலை மணி 10.30 மணியளவில் பொது
மக்களிடமிருந்து தாங்கள் தகவலைப் பெற்றதாகக் கோல கங்சார் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி ஹிஷாம் ஹருண் கூறினார்.
தைப்பிங்கிலிருந்து கோல கங்சார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று
கொண்டிருந்த 68 மற்றும் 65 வயதுடைய அத்தம்பதியரை கட்டுப்பாட்டை
இழந்த கார் ஒன்று மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன்-மனைவி இருவரும் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்த வேளையில் காரின் ஓட்டுநர் மற்றும்
பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் 51 வயது ஓட்டுநர் 1987ஆம் ஆண்டு சாலை
போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து
வைக்கபட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த விபத்து தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் விசாரணைக்கு உதவும்
பொருட்டு காவல் துறையைத் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக்
கொண்டார்.


