தெலுக் இந்தான், மே 6 - இங்குள்ள ஜாலான் சுங்கை நிபோங்கில் உள்ள சான் மின் இடைநிலைப் பள்ளியில் கடந்த மாதம் 43 மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டதற்கு நாசி கோரேங் தோம்யாம் உணவுதான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பள்ளி சிற்றுண்டிச் சாலையில் வழங்கப்பட்ட உணவு மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் கூறினார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி இரண்டு மாணவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் நச்சுணவினால் பாதிக்கப்பட்டது முதன்முதலில் கண்டறியப்பட்டது என்றும் அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹிலிர் பேராக் மாவட்ட சுகாதார அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது என்றும் அவர் கூறினார்.
13 முதல் 18 வயதுடைய அனைத்து மாணவர்களுக்கும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன. மேலும் அவர்களுக்கு வெளிநோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இரு மருந்தக மாதிரிகளில் நோரோவைரஸ் மற்றும் சப்போவைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான சரியான காரணத்தை அடையாளம் காண ஹிலிர் பேராக் மாவட்ட சுகாதார இலாகா விசாரணை நடத்தி வருகிறது என்று இன்று பள்ளிக்கு வருகைபுரிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.


