கோலாலம்பூர், மே 6 - ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 32 கிலோகிராம் போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு இன்று இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் வழங்கித் தீர்ப்பளித்தது.
விசாணையின் முடிவில் கார் பறிமுதல் பணியாளர்களான எஸ். யுவராஜா (வயது 48), ஆர். கலைகுமார் (வயது 40) மற்றும் லோரி ஓட்டுநர் கே. பார்த்திபன் (வயது 38) ஆகியோருக்கு எதிராக நியாயமான சந்தேகத்தை எழுப்ப எதிர்தரப்பு தவறியதைக் கண்டறிந்த பின்னர் நீதிபதி டத்தோ அசார் அப்துல் ஹமீட் இத்தண்டனையை வழங்கினார்.
கைது செய்யப்பட்ட தினமான கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதியிலிருந்து மூவருக்கும் எதிரான சிறைத்தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி அசார் தனது தீர்ப்பில் கூறினார்.
2019ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி கடந்த மாலை 5.35 மணியளவில் ஜாலான் டேசா பாண்டனில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்தில் 32,682.4 கிராம் (32 கிலோ) எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற ஆபத்தான போதைப்பொருளை கூட்டாகக் கடத்தியதாக மூன்று பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி (1) (ஏ) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 39பி (2) பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் 12க்கும் குறையாமல் பிரம்படி வழங்க இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது.
இதனிடையே, அதே இடத்தில் மற்றும் அதே தேதியில் 0.15 கிராம் (கிராம்) மெத்திலீன் டையாக்ஸி மெத்தாம்பெட்டமைன், 0.003 கிராம் ஹெராயின் மற்றும் 0.007 கிராம் மோனோஅசிடைல்மார்பைன்களை வைத்திருந்த குற்றத்திற்காக நீதிபதி அசார் யுவராஜாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் வான் அகமது ஹிஜ்ரா வான் அப்துல்லா நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் சார்பாக வழக்கறிஞர் டான் ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா ஆஜரானார்.


