கோலாலம்பூர், மே 6 - அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால்
பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கு உதவும் வகையில் சிறப்பு ஊக்குப்புத்
தொகுப்பை அறிமுகம் செய்வது குறித்து முதலீடு, வர்த்தகம் மற்றும்
தொழிலியல் அமைச்சு பரிசீலிக்கவுள்ளது.
அந்த வரி விதிப்பால் ஏற்படும் விளைவுகள் மற்றும் நாட்டின் நிதி
நிலைமைக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த
ஊக்குவிப்புத் தொகுப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று அதன்
அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.
பரஸ்பர வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்காவுடன் இன்று பேச்சுவார்த்தை
தொடங்கவுள்ள நிலையில் நாட்டின் மீது குறிப்பாக முக்கியத் துறைகளில்
வரி விதிக்கக் கூடாது என்ற பிரதான நோக்கத்திற்கு இதில் முன்னுரிமை
அளிக்கப்படும் என அவர் சொன்னார்.
நாம் கூடுமானவரை வரும் ஜூலை மாதம் வரை அவகாசம் வழங்குவோம். காரணம் தற்போதைக்கு நாம் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துகிறோம். இந்த பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து அதன் விளைவுகளை நாம் அறிந்து கொள்ள இயலும் என அவர் தெரிவித்தார்.
தற்போதைக்கு நமக்கு தெரிந்த விளைவுகள் என்னவென்றால் மலேசியா
மீதான 10 விழுக்காட்டு அடிப்படை வரிதான். அதே சமயம், சில
துறைகளில் வரி விதிக்கப்படுவதில்லை. பேச்சுவார்த்தைக்குப் பின்னர்
யாருக்கு, எந்த நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும்? எந்த விநியோகச்
சங்கிலி விளைவுகளை எதிர்கொள்ளும் என்பதை அறிந்து கொள்ள
இயலும். அப்போதுதான் நாம் முடிவை எடுக்க இயலும் என்றார் அவர்.
இன்று இங்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சின் 2025
காலாண்டிற்கான அடைவு நிலை அறிக்கையை வெளியிடுவது
தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.


