குவாந்தான், மே 6 - சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டா முதியவரின் உயிரைப் பறித்தது. இச்சம்பவம் ரொம்பின், தெபு ஹீத்தாம் வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.
தனது ஆறு நண்பர்களுடன் வேட்டையாடும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது 62 வயதான அந்நபருக்கு நேர்ந்த இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு புகார் கிடைத்ததாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
வேட்டையின் போது சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி திடீரென வெடித்தது. தோட்டா அந்நபரின் வலது கையின் சுண்டு விரலைத் தாக்கி பின்னர் மார்பின் வலது பக்கத்தில் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
நேற்றிரவு இங்குள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் மார்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயமே என உறுதி செய்யப்பட்டதாகக் கூறிய அவர், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையில், சட்டவிரோத வேட்டையாடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 35 முதல் 67 வயதுடைய பூர்வக்குடியினர் உட்பட ஆறு பேரை தமது தரப்பு கைது செய்து அவர்களிடமிருந்து சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள் மற்றும் ஒரு பெனெல்லி ஆர்மி-உர்பினோ வகை துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களையும் பறிமுதல் செய்ததாக யஹாயா சொன்னார்.
இச்சம்பவம் தொடர்பில் 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


