ஷா ஆலம், மே 6 - அண்மையில் கோல குபு பாரு, அம்பாங் பெச்சாவில்
நடத்தப்பட்ட கோல குபு பாரு பொது பாராகிளைடிங் அக்கியூரசி 2025 எனும்
வான்குடை மிதவை சாகசப் போட்டியில் ஆறு நாடுகளைச் சேர்ந்த 56
விளையாட்டாளர்கள் பங்கு கொண்டனர்.
வான் விளையாட்டு, பசுமை விளையாட்டு மற்றும் மக்களின் பங்கேற்பை
ஊக்குவிப்பதற்கு தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை
பிரதிபலிக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக உலு சிலாங்கூர்
நகராண்மைக் கழகத்தின் தலைவர் ஜூலைஹா ஜமாலுடின் கூறினார்.
நீல வானிலிருந்து பசுமை காடுகள் வரை விளையாட்டு உணர்வுகள்
எதிரொலித்தன. உலகத் தரம் வாய்ந்த சுற்றுச்சுழல் இடமான வாவ் உலு
சிலாங்கூரின் வியக்கத்தக்க இயற்கை எழிலை மெய்ப்பிக்கிறது என்று
அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் மற்றும் கோல குபு பாரு
பாராகிளைடிங் கிளப் இடையிலான ஒத்துழைப்பு மலேசிய வான்
விளையாட்டு சம்மேளனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
இது தவிர, இப்பிராந்தியத்தின் தலைசிறந்த வான் சாகச வீரர்கள் ஒன்று
கூடி தங்களின் திறனை வெளிப்படுத்தும் இடமாகவும் இது விளங்குகிறது.
மேலும் இந்த அங்கீகாரத்தின் வாயிலாக இந்த விளையாட்டில் பங்கேற்கும்
விளையாட்டாளர்கள் அனைத்துலக நிலையில் புள்ளிகளைப் பெறுவதற்கும்
வாய்ப்பு கிட்டுகிறது என்றார் அவர்.
இம்மாதம் 2 முதல் 4 வரை நடைபெற்ற இப்போட்டியில் சீனா, இந்தியா,
சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த
விளையாட்டாளர்கள் பங்கு கொண்டனர். ஏழு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.


