கோலாலம்பூர், மே 6 - உள்நாட்டு கால்பந்து லீக்கின் நிலைத்தன்மையை
உறுதி செய்வதற்கும் விளையாட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும்
ஏதுவாக கால்பந்து கிளப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு வலுவான நிதி
வளம் மற்றும் உண்மையான நிர்வாகத் திறன் கொண்ட தரப்பினரிடம்
ஒப்படைக்கப்பட வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்
துறை அமைச்சர் ஹன்னா இயோ கேட்டுக் கொண்டார்.
விளையாட்டாளர்களுக்கு சம்பளம் வழங்குவது, அவர்களின் நலனைக்
காப்பது போன்ற அடிப்படை பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற சில
கிளப்புகள் தவறுவது, கால்பந்து விளையாட்டின் மேன்மைக்காக ஏற்பாட்டு
ஆதரவாளர்களை ஈர்க்கும் முயற்சிகளுக்கு தடையாக அமையும் என்று
அவர் சொன்னார்.
கால்பந்து விளையாட்டிற்கே ஏற்பாட்டு ஆதரவு கிடைக்கவில்லை என்றால்
மற்ற விளையாட்டுகளை நிலையை சற்று எண்ணிப் பாருங்கள். கால்பந்து
விளையாட்டுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஏற்பாட்டு
ஆதரவை வழங்கும் தரப்பினர் நாம் எவ்வாறு கிளப்பை வழி
நடத்துகிறோம், எவ்வாறு சம்பளம் வழங்குகிறோம், எவ்வாறு
விளையாட்டாளர்களின் நலனைக் காக்கிறோம் என்பதை கவனிக்கின்றனர்.
இந்த விஷயத்தில் நாம் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க
வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தகுதி இல்லாதவர்கள் தயவு செய்து இதனைத் தொட வேண்டாம் எனக்
கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு வழி விட்டு விலகிக் கொள்ளுங்கள். சில வேளைகளில் நிர்வகிக்க முடியாதவர்கள் பதவியில் இருக்க விரும்புவதோடு மற்றவர்களையும் செய்ய விடாமல் தடுக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
கால்பந்து மலிவான விளையாட்டல்ல என்பதை நினைவூட்டிய அவர், லீக்
போட்டிகளை நடத்துவதற்கும் விளையாட்டாளர்களின் மேம்பாட்டை உறுதி செய்வதற்கும் பரந்த சூழீயல் முறை தேவைப்படுகிறது என்று அவர் நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறினார்.
உள்நாட்டு விளையாட்டுக் குழுக்களின் நிதி நிலைமை அண்மைய
ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்து வருகிறது. தனது கால்பந்து
குழுவைக் கலைத்து விட்டு அடுத்து வரும் சூப்பர் லீக் தொடரிலிருந்து
விலக பேராக் எப்.சி. முடிவெடுத்துள்ள வேளையில் மேலும் சில குழுக்கள்
அத்தகைய முடிவை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.
பேராக் மாநில கால்பந்து குழு கடந்த மூன்று ஆண்டுகளில் 4 கோடி
வெள்ளியைச் செலவிட்டுள்தாகக் கூறப்படுகிறது.


