கோலாலம்பூர், மே 6 - மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங்கின் தலைமையில் மலேசியா-சிங்கப்பூர் இருதரப்பு உறவுகள் குறிப்பாக, இவ்வாண்டு ஆசியான் தலைவராக மலேசியா இருக்கும் தருணத்தில் தொடர்ந்து வலுப்பெறும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் வோங்குடன் நேற்று தொலைபேசியில் பேசியபோது தாம் இதனைத் தெரிவித்ததாக அன்வார் கூறினார்.
சனிக்கிழமை நடைபெற்ற அந்த தீவு நாட்டின் பொதுத் தேர்தலில் வலுவான வெற்றியைப் பெற்றதற்காக தனது சகாவிற்கும் மக்கள் செயல் கட்சிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
மொத்தம் உள்ள 97 தொகுதிகளில் 87 இடங்களை மக்கள் செயல்கட்சி வென்றுள்ளது. கட்சிக்கு கிடைத்த இந்த வலுவான ஆணை வோங்கின் தலைமையின் மீது சிங்கப்பூரர்கள் வைத்திருக்கும் உயர்ந்த நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று அன்வார் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஏதுவாக வோங் மற்றும் அவரது நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற மலேசியா ஆவலுடன் இருப்பதாக அவர் கூறினார்.
இந்த உறவுகள் பகிரப்பட்ட வரலாறு, வலுவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அணுக்கமான மக்களுடன் மக்கள் தொடர்புகளில் வேரூன்றியுள்ளன என்றார் அவர்.


