கிள்ளான், மே 6 - சிலாங்கூரில் 300க்கும் மேற்பட்ட நீர்ப்பிடிப்புக் குளங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து குளங்களையும் படிப்படியாகக் கையகப்படுத்த தமது தரப்பு தற்போது முயற்சித்து வருவதாக உள்கட்டமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.
எங்களிடம் மொத்தம் 600 நீர்ப்படிப்பு குளங்கள் உள்ளன. அவற்றில் 100 க்கும் மேற்பட்டவை நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை மற்றும் ஊராட்சி மன்றத்தால் பராமரிக்கப்படுகின்றன. மீதமுள்ளவை உரிமையாளர்கள் இல்லாதவையாக உள்ளன என அவர் குறிப்பிட்டார்.
இதுவரை, பண்டார் பொட்டானிக் மற்றும் பண்டார் புத்ரி உட்பட இங்குள்ள 55 நீர்ப்பிடிப்பு குளங்களை ஜே.பி.எஸ். வெற்றிகரமாக கையகப்படுத்தியுள்ளது. மீதமுள்ளவை மூன்றாம் தரப்பினர், அதாவது அவற்றை ஒப்படைக்காத முன்னாள் நிறுவனங்களுக்கு சொந்தமான நீர்ப்பிடிப்பு குளங்களாகும் என்றார் அவர்.
இந்த ஆளில்லா நீர்ப்பிடிப்பு குளங்கள் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளன. இதில் மாநில அரசு தன்னிச்சையாக தலையிட முடியாது. ஏனெனில் அது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், சரியான செயல்முறையின்படி நாங்கள் படிப்படியாக அவற்றைக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வோம் என்று அவர் கூறினார்.
கிள்ளான் அரச மாநகர் மன்றப் பகுதிக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து விவாதிக்கும் நோக்கில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹூசேனும் இதில் கலந்து கொண்டார்.
வெள்ளத் தணிப்புத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டங்கள் பல உள்ளூர் அதிகாரிகளில் நடத்தப்படும் என்றும் இஷாம் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தின் வாயிலாக வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகளை திறம்பட கையாள்வதில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என்றார் அவர்.
இதற்குப் பிறகு, வெள்ளப் பிரச்சனையை எதிர் கொள்ளும் ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்துடனும் இதுபோன்றச் சந்திப்பை நடத்துவோம் என்று அவர் கூறினார்.


