கோலாலம்பூர், மே 6 - தடுப்புக் காவலிலிருந்து கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்ட 'டத்தோ' அந்தஸ்து கொண்ட நபர் ஒருவர், சுமார் 45 கோடி வெள்ளி மதிப்புள்ள தவறான விவரங்களைக் கொண்ட பணக் கோரிக்கையை சமர்ப்பித்த சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம் ஏ.சி.சி.) மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அறுபது வயது மதிக்கத்தக்க அந்த டத்தோ, 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு சந்தேக நபருடன் வாக்குமூலம் அளிக்க நேற்று மாலை 7.00 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகம் வந்தபோது கைது செய்யப்பட்டார்.
எம்.ஏ.சி.சி. இன்று காலை செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பதிவாளர் சித்தி ரோஸ்லிசாவதி முகமது ஜானின் அவர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
அந்த டத்தோவுக்கு நாளை வரை இரண்டு நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சி.சி. வட்டாரம் கூறியது. அதே நேரத்தில் மற்றொரு சந்தேக நபர் மே 9 வரை ஐந்து நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுக்குக் நிதியைப் பயன்படுத்தி இரண்டு சந்தேக நபர்களும் சுமார் 45 கோடி வெள்ளி மதிப்புள்ள தவறான பணக் கோரிக்கைகளை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. கிள்ளான் பள்ளத்தாக்கில் சுமார் 130 கோடி வெள்ளி மதிப்புள்ள நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தில் ஒரு பிராந்திய அலுவலகத்திலிருந்து சலுகையைப் பெற்றது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஐந்து நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் நான்கு பேர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர்.
புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ ஜைனுல் டாருஸைத் தொடர்பு கொண்டபோது இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். மேலும் இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


