கோலாலம்பூர், மே 6 - கெஅடிலான் கட்சியின் இவ்வாண்டிற்கான தேர்தல்
முடிவுகளை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளும்படி உறுப்பினர்களை
கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றம் (எம்.பி.பி.) கேட்டுக்
கொண்டுள்ளது.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றக்
கூட்டத்தில் இது குறித்து ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டதாக கட்சியின்
தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று எம்.பி.பி.
முடிவெடுத்துள்ளது. அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர அனைத்து
தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தகவல் தொடர்பு
அமைச்சருமான அவர் சொன்னார்.
தேர்தலில் வென்றவர்கள், தோற்றவர்கள் என்ற வேறுபாடின்றி தலைமைப்
பொறுப்பில் உள்ளவர்களும் உறுப்பினர்களும் தங்களின் சக்தியை ஒன்று
திரட்ட வேண்டிய தருணம் இது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு டிவி5- இலவச டிஜிட்டல் திரைப்படச் சேனலைத் தொடக்கி
வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மடாணி அரசாங்கத்தின் திட்டங்கள் யாவும் இந்த தவணை
முடிவடைவதற்குள் அமல்படுத்தப்படுவதை அனைத்து உறுப்பினர்களும்
உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கட்சி உறுப்பினர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதற்கு எது காரணமாக
இருந்தது என நிருபர்கள் கேட்ட போது, புளோக்செய்ன் முறையைப்
பயன்படுத்தி நடத்தப்பட்ட மின் வாக்களிப்பு முறை மீது நடத்தப்பட்ட உள்
மற்றும் வெளி தணிக்கையில் எந்தவிதமான ஊடுருவல், துஷ்பிரயோகம்
அல்லது வாக்களிப்பு முறையில் பழுது கண்டறியப்படவில்லை என்று
ஃபாஹ்மி தெரிவித்தார்.
அந்த முறையின் நம்பகத் தன்மை சிறப்பாக உள்ளது. மூன்றாம்
தரப்பிடமிருந்து இடையூறு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எது
உள்ளீடாக இருந்ததோ அதுவே வெளியீடாகவும் இருந்தது. இதைத்தான்
நேற்றையக் கூட்டத்தில் தெளிவுபடுத்தினோம் என்றார் அவர்.


