ஷா ஆலம், மே 5 - அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விகிதத்தை ஏற்றுக்கொள்வதானது உலக வர்த்தக அமைப்பின் (டபள்யூ.டி.ஓ.) கீழ் பாகுபாடற்ற சுயேச்சை வர்த்தகக் கோட்பாட்டை நிராகரிக்கும் விதமாக அமைகிறது என அரசாங்கம் கருதுகிறது.
பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்ப்பதற்காகப் போராடி வந்த நியாயமான வர்த்தகத்தை இந்த நடவடிக்கை ஓரங்கட்டுவதாகத் தெரிகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
நான் வலியுறுத்த விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த குழப்பத்தை நாம் ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்துடன் கடந்து வருகிறோம். மேலும் மலேசியா இந்த சூழ்நிலையை கையாளும் திறனைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
மடாணி பொருளாதார கோட்பாட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் நாடு உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான மீள்தன்மையுடனும் தயார் நிலையிலும் இருக்க உதவுகின்றன என்று அவர் இன்று நடைபெற்ற சிறப்பு மக்களவைக் கூட்டத்தில் கூறினார்.
மலேசியா அமெரிக்காவின் இறக்குமதி பொருள்களுக்கு 47 சதவீத வரி விதித்ததாக அந்நாடு கூறியதை நிதியமைச்சருமான அன்வார் நிராகரித்தார். மாறாக, விதிக்கப்பட்ட வரியின் மதிப்பு 5.6 விழுக்காடு மட்டுமே எனவும் தெளிவுபடுத்தினார்.
மலேசியாவிலிருந்து அமெரிக்கா செய்த மொத்த இறக்குமதியுடன் ஒப்பிடும்போது, மலேசியாவுடனான நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையின் எளிய விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் இந்த கணக்கீடு அமைந்துள்ளது என்று அவர் விளக்கினார்.
இந்தக் குற்றச்சாட்டுதான் மலேசியா மீது 24 சதவீத பரஸ்பர வரியை அமெரிக்கா விதிப்பதற்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டது. இது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மலேசியா விதித்ததாகக் கூறப்படும் 47 சதவீத வரியில் 50 சதவீதம் குறைப்பு ஆகும் என்று அவர் கூறினார்.
இந்த பரஸ்பர வரி விதிப்பு முடிவு மலேசியாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி செயல்திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்றும் அன்வார் மேலும் கூறினார்.


