கோலாலம்பூர், மே 5 - அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்பினால் உள்ளூர் வணிகங்களுக்கு ஏற்படும் தாக்கத்தை தணிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசு 150 கோடி வெள்ளி மதிப்பிலான மிகப்பெரிய உதவித் தொகுப்பை அறிவித்தது.
வணிக நிதி உத்தரவாதத் திட்டத்தின் கீழ் அரசாங்க உத்தரவாதங்களை உயர்த்துவதற்கு 100 கோடி வெள்ளி செலவிடப்படும் என்று இன்று நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு உதவும் வகையில் மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மேலும் 50 கோடி வெள்ளி செலவிடப்படும். இந்த முயற்சி பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான ஆறு முக்கிய உத்திகளின் ஒரு பகுதியாகும் என அவர் சொன்னார்.
இதில் உலகளாவிய வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல், உள்ளூர் ஏற்றுமதியாளர்களுக்கு உதவுதல் மற்றும் உள்நாட்டு நடவடிக்கைகளைத் தூண்டுவதற்கான திட்டங்களை விரைவுபடுத்துதல் ஆகியவையும் அடங்கும்.
இந்த முயற்சிகள் இரட்டை நோக்கங்களுக்கு உதவுகின்றன. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் மலேசியாவின் நீண்டகால பொருளாதார போட்டித்தன்மையை வலுப்படுத்தும் அதே வேளையில் குறுகிய கால முதலீட்டு நடவடிக்கைகளைத் தூண்டுகிறது என அன்வார் குறிப்பிட்டார்.
பூமிபுத்ரா உரிமைகள், உள்ளூர் விற்பனையாளர் தேவைகள் அல்லது விவேகத் துறைகளின் பாதுகாப்பு போன்ற எந்த முக்கிய தேசியக் கொள்கைகளும் பேச்சுவார்த்தைகளில் சமரசம் செய்யப்படாது. வரி அல்லாத தடைகள் குறித்த எந்தவொரு மறுஆய்வும் காலாவதியான விதிமுறைகளை மட்டுமே உள்ளடக்கும். மேலும், அனைத்து கொள்கை மாற்றங்களும் வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய முறையில் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தேசிய புவி-பொருளாதார ஒருங்கிணைப்பு மன்றத்தின் கீழ் தரவு சார்ந்த கண்காணிப்பு தள உருவாக்கம் இந்த விவேக பங்காளித்துவத்தின் மையக் கூறு ஆகும். இது உற்பத்தி அளிப்பாணைகள், ஏற்றுமதி அளவுகள், சில்லறை விற்பனை, வேலை நீக்கங்கள் மற்றும் கடன் வளர்ச்சி போன்ற குறியீடுகளை கண்காணித்து சரியான நேரத்தில் கொள்கை பதில்களை அளிக்கும் என்றார் அவர்.
அனைத்துலகக் கண்காட்சிகள் மற்றும் வணிகப் பொருத்தம் மூலம் உள்ளூர் வணிகங்கள் புதிய சந்தைகளை ஆராய உதவும் வகையில் மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகத்திற்கு 5 கோடி வெள்ளி ஒதுக்கீட்டையும் அன்வார் அறிவித்தார்.
மற்றொரு முக்கிய முயற்சியாக மலேசியா விமானப் போக்குவரத்துக் குழுமம் 30 போயிங் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதுதவிர, மேலும் 30 விமானங்களை வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தவும் வாஷிங்டனுடனான மலேசியாவின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் இது உதவும் என அவர் குறிப்பிட்டார்.


