கோலாலம்பூர், மே 5 - மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே
நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அந்நாட்டின் வரி விதிப்பு
தொடர்பில் உறுதியான நிலைப்பாடு கிடைத்தப் பின்னர் 2025ஆம் ஆண்டு
வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி
(கே.டி.என்.கே.) தொடர்பான முன்கணிப்பை மறு ஆய்வு செய்வது குறித்து
பரிசீலிக்கப்படும்.
அந்த வரி விதிப்பின் தாக்கங்களை நிதியமைச்சும் பேங்க் நெகாராவும்
தற்போது ஆய்வு செய்து வரும் நிலையில் அமெரிக்காவுடன் நடத்தப்பட்டு
வரும் பேச்சுவார்த்தையில் அதிபர் டேனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு
தொடர்பில் உறுதியான நிலைப்பாடு கிடைத்தவுடன் உள்நாட்டு மொத்த
உற்பத்தி தொடர்பான முன்கணிப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் மக்களவையில் இன்று
நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நடப்புச் சூழல் மாறுதலுக்கு உட்பட்டது எனக் கூறிய அவர், முன்பு
கணித்ததைப் போல் இவ்வாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை
4.5 முதல் 5.5 விழுக்காடு வரை பதிவு செய்வதற்கான சாத்தியம் இல்லை
எனத் தெரிவித்தார்.
இந்த வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை அமெரிக்க கடந்த மாதம் 2ஆம்
தேதி அறிவித்தவுடன் பல ஆக்ககரமான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தேசிய புவிபொருளாதார நடவடிக்கை மையம்
தொடங்கப்பட்டு அதன் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றேன். பல்வேறு
அமைச்சகள் மற்றும் அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த மையத்தின் செயலகமாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சு செயல்படும் என்றார் அவர்.
இந்த என்.ஜி.சி.சி. செயலகம் தொடங்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள்
மூன்று முறை கூட்டங்களை நடத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.


