கோலாலம்பூர், மே 5 - அமெரிக்கப் பொருட்களுக்கு மலேசியா 47 விழுக்காட்டிற்கும் அதிகமான வரியை விதித்துள்ளது என்ற அமெரிக்காவின் கூற்றை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முற்றாக நிராகரித்தார். அந்தக் குற்றச்சாட்டு "ஆதாரமற்றது மற்றும் நியாயமற்றது" என்றும் அவர் வர்ணித்தார்.
மலேசியப் பொருட்களுக்கு 24 விழுக்காடு வரை கடுமையான பதிலடி வரியை அறிமுகப்படுத்தும் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கையை இன்று நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய போது அன்வார் கடைமையாக விமர்சித்தார்.
இது அனைத்துலக விதிகளின் அடிப்படையிலான வர்த்தக அமைப்பைக் பற்றாக்குறைக்கு உட்படுத்தும் ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கை அவர் என்றும் சாடினார்.
அமெரிக்காவின் இந்த கணக்கீடு 2024 ஆம் ஆண்டில் மலேசியாவின் மொத்த இறக்குமதியுடன் ஒப்பிடும்போது மலேசியாவுடனான அதன் வர்த்தக பற்றாக்குறையின் எளிமையான விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மலேசியா மீது 24 விழுக்காடு பதிலடி வரி விதிக்கப்படுகிறது. இது அமெரிக்க இறக்குமதிக்கு மலேசியா விதித்ததாகக் கூறப்படும் 47 விழுக்காட்டு வரியிலிருந்து 50 சதவீதம் குறைப்பு ஆகும்.
இருப்பினும், இந்த கணக்கீடு உண்மையான கட்டண நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதோடு பொருளாதாரக் கோட்பாட்டில் ஒரு நல்ல அடித்தளத்தையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் மக்களவையில் கூறினார்.
இத்தகைய பாதுகாப்புவாதக் கொள்கைகள் உலகளாவிய வர்த்தக அமைப்பை துண்டு துண்டாகப் பிரிக்க வழிவகுக்கும். குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கக்கூடும் என்றும் அன்வார் எச்சரித்தார்.
அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் இரண்டாவது தவணை நிர்வாகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அமெரிக்க வர்த்தகக் கொள்கை வழிகாட்டுதலின்படி மலேசியா இப்போது 24 சதவீதப் பதிலடி வரிக்கு உட்பட்டுள்ளது.
எனினும், கடந்த ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வந்த 90 நாள் மறுஆய்வு காலத்தில் இந்த விகிதம் தற்காலிகமாக 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மலேசியா பாரம்பரிய பங்காளிகளுடன் வர்த்தக உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், குறிப்பாக ஆசியான், சீனா, ஜப்பான் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்ற (ஜிசிசி) நாடுகளுடன் புதிய அனைத்துலகச் சந்தைகளை விரிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான தொடக்கக்கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தலைமையிலான மலேசிய வர்த்தகக் குழு நேர்மறையான முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அன்வார் கூறினார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நியாயமான மற்றும் நன்மை பயக்கும் முடிவை உறுதி செய்வதற்காக விவாதங்கள் தொடரும் என்று அவர் சொன்னார்.
உலகளாவிய நெருக்குதல்களுக்கு மலேசியா எளிதில் அடிபணியாது என்று வலியுறுத்திய அன்வார், முக்கிய பொருளாதாரக் கொள்கைகளைப் பாதுகாப்பதில் நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் பூமிபுத்ரா கொள்கை, உள்ளூர் விற்பனையாளர்களுக்கான தேவைகள் மற்றும் விவேக பங்காளித்துவ துறைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் முக்கிய கொள்கைகள் எதிலும் மாற்றப்படாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
ஏனென்றால், எங்கள் சுதந்திர வர்த்தக நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதில் நாங்கள் உறுதியாக இருந்தாலும், தேசிய பாதுகாப்பு மற்றும் விவேக பங்காளித்துவ நலன்களின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணிக்க முடியாது.
உண்மையான பொருளாதார வலிமை நமது வெற்றியை உறுதி செய்கிறதே தவிர வர்த்தக பேச்சுவார்த்தைகள் அல்ல. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் திறன் அல்ல, புதிய சந்தை அணுகலைத் திறப்பது மட்டுமல்ல என்பதை நான் வலியுறுத்த வேண்டும் என அவர் சொன்னார்.


