வத்திகன் நகர், மே 5 - போப்பாண்டவரின் இறுதி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது போப் மொபைல் வாகனங்களில் ஒன்று காஸா பகுதியில் உள்ள சிறார்களுக்கான நடமாடும் சுகாதார மருத்துவமனையாக மாற்றப்படும் என்று வத்திகனின் அதிகாரப்பூர்வ ஊடகம் நேற்று தெரிவித்தது.
மறைந்த போப்பாண்டவர் கடந்த 2014 ஆம் ஆண்டு புனித பூமிக்கு பயணம் செய்தபோது பயன்படுத்திய இந்த வாகனத்தில் இஸ்ரேலிய படையெடுப்பால் சுகாதார சேவைகள் பெரும் பாதிப்புக்குள்ளான பாலஸ்தீனப் பகுதியில் உள்ள இளம் நோயாளிகளுக்கு உதவுவதற்காக நோயறிதல் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த மாதம் இறந்த போப் பிரான்சிஸ், இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை கத்தோலிக்க உதவி அமைப்பான கரிட்டாஸ் ஜெருசலேமிடம் ஒப்படைத்ததாக வத்திகன் தெரிவித்தது.
காஸாவில் சுகாதார அமைப்பு கிட்டத்தட்ட முற்றிலும் நிலைகுலைந்துவிட்ட நிலையில் இது ஒரு உறுதியான உயிர்காக்கும் முன்னெடுப்பாகும் என்று இந்த திட்டத்தை ஆதரிக்கும் கரிட்டாஸ் ஸ்வீடனின் பொதுச் செயலாளர் பீட்டர் புரூன் வத்திகன் நியூஸிடம் தெரிவித்தார்.
இந்த நடமாடும் வாகனத்தில் விரைவான தொற்று சோதனைகள், தடுப்பூசிகள், நோயறிதல் கருவிகள் மற்றும் தையல் போடும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் மருத்துவ பணியாளர்களும் அதில் பணியமர்த்தப்படுவார்கள்.
காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பது சாத்தியமாகும்வரை சுகாதார வசதிகள் அணுக முடியாத சமூகங்களுக்கு இந்த நடமாடும் கிளினிக்கை அனுப்ப கரிட்டாஸ் திட்டமிட்டுள்ளது.
இது வெறும் வாகனம் அல்ல. காசாவில் உள்ள சிறார்களை உலகம் மறக்கவில்லை என்பதற்கான செய்தி என்று புரூன் மேலும் கூறினார்.
போப்பாண்டவர் பிரான்சிஸ் போப்மொபைல் வாகனங்களை வைத்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களுக்கு அவர் பயணம் செய்தபோது பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் ஒன்று அவர் வத்திக்கானுக்குத் திரும்பிய பின்னர் அங்கேயே வைக்கப்பட்டிருந்தது.


