கோலாலம்பூர், மே 5 - எதிர்வரும் வெள்ளிக்கிழமை மலேசியாவுக்கு
மேற்கொள்ளவிருந்த தனது அதிகாரப்பூர்வ பயணத்தை பாகிஸ்தான்
பிரதமர் ஷேபாஷ் ஷாரிப் ஒத்தி வைத்துள்ளார்.
இந்தியாவின் கட்டுப்பாட்டிலான காஷ்மீரில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட
தாக்குதலின் எதிரொலியாக அப்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக்
கருத்தில் கொண்டு இந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நேற்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த தகவலை
பாகிஸ்தான் பிரதமர் தம்மிடம் தெரிவித்ததாக அவர் தனது பேஸ்புக்
பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தற்போது எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையை நான்
முழுமையாக உணர்ந்துள்ளதோடு அங்கு பதற்ற நிலை விரைவில்
தணியும் என்ற மலேசியாவின் எதிர்பார்ப்பையும் வெளியிட்டேன் என
அவர் தெரிவித்தார்.
எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அந்த தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்கு
ஏதுவாக சுயேச்சையான மற்றும் வெளிப்படையான விசாரணையை
நடத்தும் முயற்சிக்கு மலேசியாவின் உறுதியான ஆதரவையும்
புலப்படுத்துகிறேன் என்று அவர் சொன்னார்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான எங்களின் அணுக்கமான உறவு
இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு
ஆதரவளிக்கும் இடத்தில் எங்களை வைத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த தொலைபேசி உரையாடலின் போது மலேசியாவின் நீண்டகால நட்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டியதோடு தற்போது விவாதத்தில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார் என்று அன்வார் கூறினார்.
கடந்த மாதம் 22ஆம் தேதி காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலைத்
தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில்
கடுமையான விரிசல் ஏற்பட்டது.


