வாஷிங்டன், மே 5 - வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து
திரைப்படங்களுக்கும் 100 விழுக்காடு வரி விதிக்க அமெரிக்க அதிபர்
டேனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக அனாடேலு ஏஜென்சி செய்தி
வெளியிட்டுள்ளது.
மோசமான வீழ்ச்சியை எதிர்நோக்கி வரும் உள்நாட்டுத் திரைப்படத்
துறையை பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை தாம் அமல்படுத்துவதாக ட்ரூட் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட அறிக்கை ஒன்றில் டிரம்ப் கூறினார்.
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு நம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும்
அனைத்து திரைப்படங்களுக்கும் 100 விழுக்காடு வரி விதிப்பதற்கான
நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி அமெரிக்க வர்த்தக இலாகா மற்றும்
வர்த்தகப் பிரதிநிதிகளை நான் பணித்துள்ளேன் என்று அவர் சொன்னார்.
அமெரிக்கத் திரைப்படங்களுக்கு எதிரான வெளிநாட்டுத் திரைப்படங்களின்
ஆதிக்கம் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறிய
அவர், அத்திரைப்படங்கள் ஒருவகையான செய்தி அல்லது பிரச்சார
வடிவத்தைக் கொண்டுள்ளன என்றார்.
அமெரிக்காவின் ஹாலிவூட் மற்றும் இதர துறைகள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளன. இது வெளிநாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக
உள்ளது என்றார் அவர்.


