மலாக்கா, மே 5 - பொது சாலைகளில் மின்னியல் ஸ்கூட்டர்களை ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாலைப் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பச்சாங் அருகே உள்ள அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் நெடுஞ்சாலையில் போக்குவரத்து விளக்கு சந்திப்பில் மூன்று பேர் மின்னியல் ஸ்கூட்டர்களை ஓட்டுவதைக் காட்டும் வீடியோ பதிவு பரவலாகப் பகிரப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“இந்த நடத்தை சட்டவிரோதமானது மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற சாலை பயனர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்,” என்று மலாக்கா ஜேபிஜே துணை இயக்குநர் கைருல் அஸ்வத் அப்துல் ஹலீம் கூறினார்.
மைக்ரோமொபிலிட்டி வாகனங்களை, பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் ஒட்டுவது, 2021 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஆணைப்படி குற்றமாகும்.
அது மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிகபட்சம் 1,000 ரிங்கிட் அபராதம் 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


