கோத்தா கினபாலு, மே 5 - சபா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 488 குடும்பங்களைச் சேர்ந்த 1,627 பேராக உயர்வு கண்டது. நேற்று மாலை 4.00 மணியளவில் இந்த எண்ணிக்கை 455 குடும்பங்களைச் சேர்ந்த 1,526 பேராக இருந்தது.
சூக் மாவட்டத்தில் 377 குடும்பங்களைச் சேர்ந்த 1,268 பேர் நான்கு துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளதாக சபா மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
டத்தோ எல்ரோன் அகின் மண்டபத்தில் 671 பேரும் சூக் சமூக மண்டபத்தில் 272 பேரும் பெக்கான் கெனிங்காவ் சமூக மண்டபத்தில் 208 பேரும் டேவான் கம்போங் அன்சிப் தெங்காவில் 117 பேரும் தங்கியுள்ளதாக அது குறிப்பிட்டது.
இதனிடையே, பியூபோர்ட்டில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 359 பேர் செலாங்கோன் நிரந்தர நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாநிலத்தில் மொத்தம் 19 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அவற்றில் பத்து கிராமங்கள் பியூபோர்ட்டிலும் ஒன்பது கிராமங்கள் சூக் மாவட்டத்திலும் உள்ளன.


