கோலாலம்பூர், மே 5 - அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரிகளை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விளக்கமளிக்கவுள்ளார்.
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், காலை 11.00 மணிக்கு நடைபெறும் சிறப்புக் கூட்டத்தில் இந்த விஷயத்தைப் பற்றி உரையாற்றுவார் என்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து இறக்குமதிப் பொருட்களுக்கும் பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை மற்றும் அதனால் மலேசியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய அதன் தாக்கங்கள் குறித்து பிரதமர் விளக்கம் அளிப்பார் என்று அது கூறியது.
பல்வேறு அமைச்சுகள் மற்றும் துறைகளில் அரசாங்கத்தின் பதிலை அன்வார் கோடிட்டுக் காட்டுவார். அத்துடன் சில தொழில்களுக்கான தற்போதைய கொள்கைகளை மதிப்பாய்வு செய்வது உட்பட குறுகிய மற்றும் நடுத்தர கால தீர்வுகளின் ஒருங்கிணைப்பு பற்றியும் அவர் விளக்குவார்.
அனைத்துலக வர்த்தகப் போரின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் மலேசியப் பொருளாதாரத்தின் மீள்தன்மையை உறுதி செய்வதற்கும் நாட்டின் நீண்டகால பொருளாதாரத் திட்டங்கள் குறித்தும் பிரதமர் தமதுரையில் குறிப்பிடுவார்.
பிரதமரின் உரைக்குப் பிறகு, விளக்கங்களைப் பெறவும் தங்கள் கருத்துக்களை வழங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதன் பிறகு
எழுப்பப்படும் விஷயங்களுக்கு தொடர்புடைய அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.
பிரதமரின் வேண்டுகோளின் பேரில் சிறப்பு அமர்வு கூட்டப்படுவதாக மலேசிய நாடாளுமன்றம் ஏப்ரல் 24ஆம் தேதி தெரிவித்தது.
மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படும் அழுத்தமான பிரச்சனைகளை அனுமதிக்கும் வகையில், மக்களவை நிலையாணை 11(3) இன் இக்கூட்டம் நடைபெறுகிறது.


