ஜாலான் அம்பாங், மே 5 - கொசொவோ குடிமக்களுக்கு விசா விலக்குகளை வழங்கும் மலேசியாவின் முடிவை அந்நாட்டின் குடியரசு வரவேற்கிறது. இந்த முயற்சி இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்தப் புதிய கொள்கை மக்களிடையே நல்லுறவை ஊக்குவிப்பதோடு, சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று கொசொவோ அதிபரான டாக்டர் ஜோசா ஒஸ்மானி சத்ரியு தெரிவித்தார்.
எனவே, கொசொவோ மக்கள் நிறைய பேர் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள். இது கொசொவோவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, கொசொவோ மக்கள் 30 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய மலேசியா அனுமதித்திருந்த வேளையில், மலேசியர்களுக்கு 90 நாள்கள் விசா விலக்கை கொசொவோ வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-பெர்னாமா


