ஈப்போ, மே 5 - கைவிடப்பட்ட ஈயக் குட்டை ஒன்றில் பதின்ம வயது இளைஞர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் தைப்பிங் அருகே கமுண்டிங்கில் உள்ள தாமான் பால்மா 4 இல் நேற்று மாலை நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.23 மணிக்கு தனது தரப்பினருக்கு அழைப்பு வந்ததாகப் பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.
அவசர அழைப்பின் பேரில் கமுண்டிங் தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தாகக் கூறிய அவர், அந்த 14 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் 4.5 மீட்டர் தொலைவில் மூழ்கியது தெரியவந்தது என்று அவர் சொன்னார்.
நீரில் மூழ்கிய பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
உயிரிழந்த அந்த பதின்ம வயது இளைஞரின் உடல் பின்னர் மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு முடிவடைந்ததாகவும் சபரோட்ஸி கூறினார்.


