நிபோங் திபால், மே 4- விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் தீப்பற்றிய
சம்பவத்தில் இரு ஆடவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம்
ஜாலான் சுங்கை கெச்சில் கோல்ப் ரிசோர்ட் அருகே நேற்றிரவு நிகழ்ந்தது.
உடலில் ஏற்பட்ட பலத்தக் காயங்கள் மற்றும் தீப்புண்கள் காரணமாக
நாற்பது வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் உயிரிழந்ததாக பினாங்கு
மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீயணைப்பு பிரிவு உதவி
இயக்குநர் ஜோன் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் நேற்று பின்னிரவு 12.05 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து நிபோங் திபால் தீயணைப்பு நிலையத்திலிருந்து
ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு இரு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு
விரைந்ததாக அவர் சொன்னார்.
இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டிருந்தது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவ்விரு மோட்டார்
சைக்கிள்களும் 80 விழுக்காடு தீயில் அழிந்து விட்டன என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடுமையான காயங்கள் மற்றும் தீப்புண்களுக்கு ஆளான ஆடவர் ஒருவர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மற்றொருவர் 50 விழுக்காடு
தீக்காயங்களுடன் சுங்கை பாக்காப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றார் அவர்.


